Monday, 10 November 2014

பகவத் கீதையில் என்ன சொல்லியுள்ளது ? - சுருக்கமாக சொல்லுங்கள் - குருவிடம் சீடனின் வேண்டுகோள் !

முக்கூர் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ஹாசார் உபன்யாசம் !
ஒரு சிஷ்யன் ஒரு குருவை தேடி போனான். "கீதையில் என்ன சொல்லியுள்ளது என அறிய ஆவலாக உள்ளேன். ஆனால் முழு கீதையையும் என்னால் படிக்க முடியாது. ஆகவே எது முக்கியமோ அதை மட்டும் சொல்லுங்கள் " என்று குருவை வேண்டினான்.
" சரி முதல் அத்யாயத்தை தள்ளு " என்றார் குரு. "தள்ளிவிட்டேன் " - இது சிஷ்யன் ! இப்படி ஒவ்வொரு அத்யாயமாக தள்ளிக்கொண்டே போய், குரு முதல் 17 அத்யாயங்களையும் தள்ளினார்.
இனி 18 ஆம் அத்யாயம் தான் பாக்கி ! அதை மட்டும் படித்தால் போதும், முழு கீதையையும் படித்த மாதிரி !
சீடன் அந்த அத்யாயத்தில் எத்தனை ஸ்லோகங்கள் என எண்ணி பார்த்தான். " அப்பா! 78 சுலோகங்களா ! என்னால் முடியாது.
சிஷ்யன் கூறினான் "ஏதாவது ஒரு முக்கியமான ஸ்லோகத்தை மட்டும் சொல்லுங்கள், படிக்கிறேன்".
"சரி "சர்வ தர்மான் பரித்யஜ்ய " என்ற 68 ஆவது ஸ்லோகத்தை மட்டும் சொல்லு ! - இது குரு.
சிஷ்யன் " என்னது இதில் 12 பதங்களா ? இதில் முக்கிய இரண்டு பதங்கள் மட்டும் சொல்லுங்கள்.
குரு : "சரி, மா சுச : " என்ற இரண்டு பதங்களை மட்டும் படி !
சிஷ்யன் : இதற்கு என்ன பொருள் ?
" கவலை படாதே " என்பது பொருள்.
" எப்போது கவலை படாது இருக்கலாமாம் ? "
"பகவான் சொன்னபடி செய்தால் கவலை படாது இருக்கலாம் "
"அப்படி பகவான் என்னதான் சொன்னார் ?"
" அது முழு பகவத் கீதையையும் படித்தால் தான் தெரியும்" என்றார் குரு !!
ஸ்ரீ முக்கூர் லக்ஷ்மி நரசிம்ஹாசார், அசோக் நகரில் நிகழ்த்திய " விஷ்ணு புராணம் " உபன்யாசத்தின் போது சொன்னது.

No comments:

Post a Comment